மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மக்களுக்கு உதவும் வகையில் தனது ஆட்டோவை இலவச வாகனமாக மாற்றியுள்ளார்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ். கடந்த 10 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வரும் இவர் கொரோனா முதல்அலையின் போதிலிருந்தே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குவது, நோய்த்தாக்கம் உள்ள பகுதிகளுக்கு சென்று காய்கறிகள் வழங்குதல், நியாயவிலைக்கடை பொருட்களை எடுத்துச்சென்று வழங்குதல் என பல்வேறு சேவைகளை செய்தார்.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த நேரத்திலும் அவசர காலத்தேவைக்காக மக்கள் பயணிக்கும் வகையில் தனது ஆட்டோவை இலவச வாகனமாக மாற்றியுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்ததின் அனுமதி பெற்று அதற்கான அடையாள அட்டையோடு பயணிக்கும் குருராஜ், ஊரடங்கு நேரத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நபர்களுக்கும், போக்குவரத்து வசதி இல்லாமல் பேருந்து நிறுத்தம், ரயில் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை அழைத்துச்செல்வதற்கும் தனது ஆட்டோவை இலவசமாக வழங்குகிறார்.
இவை மட்டுமன்றி, ஒரு சில கொரோனா நோயாளிகளை கூட அவசர மற்றும் நெருக்கடி நேரத்தில் ஆட்டோவில் அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தற்போதைக்கு இவரும், இவருடைய நண்பர் அன்புநாதன் என்பவரும் இந்த சேவை முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் கடந்தமுறை போல தன்னார்வலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கி பொதுமக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.