TNPSC மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு கோரிய வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

TNPSC மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு கோரிய வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு
TNPSC மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு கோரிய வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு
Published on

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மதிப்பெண் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கு  ஆகஸ்ட் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டி.என்.பி.எஸ்.சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜனவரி 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டும் தற்போது வரையில் சீனியாரிட்டி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் எந்தவித நடவடிக்கையும் டி.என்.பி.எஸ்.சி எடுக்கவில்லை. மேலும் அதுசார்ந்த பட்டியலை கூட தயாரிக்கவில்லை என தெரிவித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அதுசார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. விரைவில் அமல்படுத்தும் என தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த மூன்று வாரத்தில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்ய அன்றைய தினம் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வ்ழக்கு இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, அனிருதா போஸ் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி தரப்பில், இந்த விவகாரத்தில் சில சிக்கல்கள் உள்ளன, குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் டி.என்.சி்எஸ்.சி.யில்  தேர்ச்சி பெற்றவருக்கு தற்போது  மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்றால் அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றமே ஒரு வரையறையை வகுக்க வேண்டும் என கோரப்பட்டது  

இந்த வழக்கில் பல்வேறு துறைகள் சம்மந்தப்பட்டுள்ளதால் அனைத்து மனுதாரர்களும் தாங்கள் கோரும் நிவாரணம் என்ன என்பது தொடர்பாக விவரங்களை ஒரே ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பில் தங்களது நடைமுறை சிக்கல் மற்றும் தற்போது இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக விவரங்களை ஒரே ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்

இதையும் படிக்கலாம்: ‘லைன்ல வந்ததுக்கு நன்றிங்க அண்ணா’- முதல்வருடன் ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வத்தின் ஆடியோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com