சென்னை தியாகராய நகரில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்புடன் இருக்கும் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் பற்றி எரிந்தது. தீ அணைப்பு துறை வீரர்கள், தீயை அணைக்க முழு முயற்சியுடன் ஈடுபட்டாலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்தது. இதனையடுத்து அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரில் வந்து தீயணைப்பு பணிகளை துரிதப்படுத்தி சென்ற நிலையில் கட்டடத்தின் கண்ணாடிகள் சத்தத்துடன் நொறுங்கி விழுந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நேற்றிரவு 11.20 மணிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 7-வது மாடியில் தீ கனன்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அதிபயங்கரமாக எரிந்த தீயால், அதிகாலை 3.19 மணிக்கு 7-வது மாடியில் இருந்து 2-வது மாடி வரை கட்டடம் சரிந்தது. கட்டடம் சரிந்த பிறகும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் வீரர்கள் யாரும் அருகில் செல்லமுடியவில்லை. இதனையடுத்து காலை 7 மணியளவில் கட்டடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்தது. தி. நகர் உஸ்மான் சாலை முழுவதும் தீயால் புகை மூட்டம் சூழ்ந்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், அதைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.