தமிழக காவல்துறையில் பணிபுரியும் ஐ.ஜி. ஒருவர் மீது பெண் போலீஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளித்த பெண் அதிகாரி போலீஸ் சூப்பிரண்டு ஆக பணி புரிந்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சம்பந்தப்பட்ட ஐ.ஜி.யின் அலுவலகத்திற்கு சென்றதாகவும் அப்போது தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் பெண் போலீஸ் அதிகாரி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மருத்துவ விடுமுறை எடுத்துவிட்டு பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார் பெண் அதிகாரி. பின்னர், ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், சம்பந்தப்பட்ட அந்த ஐ.ஜி. தன்னிடம் எவ்வாறு எல்லாம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்பதை விரிவாக தெரிவித்துள்ளார். பல முறை மறைமுகமாக சமிக்ஞைகள் செய்ததாகவும், பின்னர் வெளிப்படையாக தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் என்றும் அந்தப் புகாரில் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். ஐ.ஜி.யின் விருப்பத்திற்கு இணங்க மறுக்கவே மிரட்டும் தொனியில் நடந்து கொள்ள தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டி இந்தப் புகாரை விசாரிக்கும் என்று அவரிடம் டிஜிபி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்றும், விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் விஷாகா கமிட்டியை டிஜிபி ராஜேந்திரன் புதுப்பித்தார். அந்த கமிட்டியில், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரடண்ட் போலீஸ் சரஸ்வதி, டிஜிபி அலுவல அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள செய்திகள் வெளியாகி வரும் நிலையில், காவல்துறையிலேயே பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.