தமிழகத்தில் விசைத்தறிகளால் துணிகளை உற்பத்தி செய்வதில் ஈரோடு மாவட்ட விசைத்தறி கூடங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இங்குள்ள விசைத்தறிகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் ‘ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு எங்களுக்கு வேண்டும்’ என்ற கோரிக்கையை நீண்டநாட்களாக வைத்து வருகின்றனர்.
விசைத்தறி மூலம் அரசின் விலையில்லா வேஷ்டி, சேலை, பள்ளி சீருடைகள் மற்றும் வெளி ஆர்டர்கள் மூலம் ரயான் துணிகள் ஆகியவற்றையும் இவர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதுபற்றி நம்மிடையே பேசிய அவர்கள், “அரசு கொடுக்கும் விலையில்லா வேஷ்டி சேலைகளை நாங்கள்தான் உற்பத்தி செய்கிறோம். அவற்றுக்கு தேவையான நூலை, மொத்தமாக விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் வழங்கும். இது சரியான காலத்திற்குள் வழங்கப்படுவதில்லை. நூல்களை காலம் தாழ்த்தாமல் வழங்கினால்தான், எங்களாலும் உரிய காலத்தில் உற்பத்தியை செய்யமுடியும். இப்பிரச்னையில் அரசு முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே நாங்கள் அரசிடம் கோரிக்கை வைத்தபோதும், பயனில்லை. எங்கள் வேதனை யாருக்குத்தான் தெரியுமோ?” என்று வேதனை தெரிவித்தத்துடன், கோரிக்கையும் வைத்தனர்.
தற்போது அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் தானியங்கி தறியில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், குறைந்த அளவிலேயே விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், அழிந்து வரும் நிலையில் உள்ள விசைத்தறி தொழிலை மீட்டெடுக்க சீருடைகளை உற்பத்தி செய்யும் பணியை விசைத்தறியாளர்களிடம் கொடுத்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு அண்மையில், விசைத்தறியாளர்களின் இலவச மின்சாரத்தை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தியிருக்கிறது. இந்நிலையில் 'விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற வேண்டும்' என்று இவர்களின் சங்கங்களும் தெரிவிக்கின்றன. அப்படி நிறைவேற்றதன் மூலம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்பதோடு, அழிந்து வரும் விசைத்தறி தொழிலையும் மீட்டெடுக்க முடியும் என்கின்றனர் அவர்கள்.