தமிழகத்தில் அரசுப்பேருந்துகளில் இந்தி எழுத்துக்கள் இல்லை என போக்குவரத்துத் துறை விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசைப் போலவே அதிமுக அரசும் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியிருந்தார். புதிய அரசுப் பேருந்துகளில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி சில படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் வாங்கிய பேருந்துகளில், தமிழுக்கே இடமில்லை எனவும் அவர் சாடியிருந்தார்.
இதற்கு விளக்கமளித்து தமிழக அரசுப் போக்குவரத்துறை, வெளிமாநிலத்தில் தயாரித்து கொண்டுவரப்பட்ட ஒரு பேருந்தில் இந்தி ஸ்டிக்கர் இருந்ததாக தெரிவித்துள்ளது. பயணிகளின் சேவைக்கு விடுவதற்கு முன்பே பேருந்தில் இருந்த இந்தி ஸ்டிக்கர் அகற்றப்பட்டு விட்டதாகவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது. தமிழகத்தில் ஓடும் எந்தப் பேருந்துகளிலும் இந்தி எழுத்துக்கள் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.