கனடாவில் தமிழக மாணவர் ஒருவர் கார் விபத்தில் பலியாகியுள்ளார். இதுதொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் நவீன்ராஜ். கனடாவில் உள்ள துர்காம் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றுவந்தார். கல்விச் செலவுக்காக பகுதி நேரமாக பீட்சா கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன்ராஜ் டவுன்டன் சாலையில் சிக்னலில் தனது வாகனத்தில் காத்து நின்றபோது பின்னால் இருந்து வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நபர் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்தது தெரியவந்துள்ளது. அந்த சாலையில் காரை இயக்கவேண்டிய வேகத்திற்கு இரண்டு மடங்கு வேகமாக காரை ஓட்டிவந்ததால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக நவீனின் நண்பரான ஆதி கூறும்போது, “ பகுதிநேர வேலையை முடித்துவிட்டு நவீன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நவீனின் பெற்றோர்களுக்கு கனடா வந்து செல்வதற்கு போதிய வசதி இல்லை. நவீனின் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல கல்லூரி நிர்வாகம் உதவுகிறது. விபத்து தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை” என தெரிவித்தார்.
Courtesy: TheNewsMinute