தமிழக சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் 28ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அச்சமயம் தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கு சில வாரங்களுக்கு முன்பு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பான கடிதம் திமுக சார்பில் சட்டப்பேரவைச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் வரும் 28ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம், எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 22 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 122 ஆகவும், திமுகவின் பலம் 100 ஆகவும் உள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 7 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். சுயேச்சை உறுப்பினராக டிடிவி தினகரன் உள்ளார்.
இவர்களைத் தவிர்த்து சபாநாயகர் தனபால் நடுநிலை வகிப்பார். மேலும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றிபெற 117 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் 108 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.