நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன அமைச்சர்கள் யார்? யார்?

நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன அமைச்சர்கள் யார்? யார்?
நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன அமைச்சர்கள் யார்? யார்?
Published on

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இவர் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு முன் இதேபோன்று தண்டனையை பெற்றவர்கள் யார்? அவர்கள் தண்டனை பெற்ற போது அவர்கள் வகித்து வந்த பதவிகள் என்ன ஆனது?

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி

1995-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக செல்வகணபதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், செல்வகணபதி உள்பட 5 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது செல்வகணபதி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். ஊழல் வழக்கில் செல்வகணபதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உடனடியாகப் பறிபோனது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி போன தமிழகத்தைச் சேர்ந்த முதல் அரசியல்வாதி செல்வகணபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த 1991-96-ஆம் காலகட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்ட சமயத்திலும் கூட ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகவே பதவி வகித்தார். ஆனால் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் உடனடியாக அவரின் எம்எல்ஏ பதவி பறிபோனது. முதலமைச்சர் என்கிற பதவியையும் அவர் இழந்தார். 

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1998-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்தாடுவதாகவும், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தபோது, அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள மீது கல்வீசி தாக்கியும், தீ வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஓசூர் போலீசார் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது சட்டப்பிரிவுகள் 147, 148, 332, 353, 435, 307 ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அதற்குள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அவகாசம் அளித்தார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை எற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு ஒரு எம்.பி.அல்லது எம்.எல்.ஏ, தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி உடனடியாக பறிபோகும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்த அளவில் நடந்த அரசியல் நிகழ்வுகள் இவை. இந்திய அளவிலும் இதைபோன்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது. பீகாரில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தவர் லாலு பிரசாத் யாதவ். இவருடைய ஆட்சிக் காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து. இதனையடுத்து அவர் அப்போது வகித்து வந்த எம்.பி பதவியை உடனடியாக இழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com