சட்டமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கட்சிகளின் வரவு, பெரிய தலைவர்களின் வெற்றிடம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது 2021. தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினின் நேரடி பரப்புரை குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது 2ஆம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 13ஆம் தேதி சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் பரப்புரையை கமல்ஹாசன் தொடங்கினார். தென் மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாள்களாக அவர் பரப்புரையை நிறைவு செய்தார். இந்நிலையில், இன்று முதல் கமல்ஹாசன் 2ஆம் கட்ட பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் பரப்புரை நடைபெறவுள்ளது. இதனிடையே, டார்ச்லைட் சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி, அந்த சின்னத்தை வேண்டாம் என அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தங்களுக்கு வேண்டாம் என அந்த கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் அந்த சின்னம் மநீமவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.