பரப்புரைகள் முடிய இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. இதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பரப்புரைகளில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திறந்த வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரித்தார். தேர்தல் நேரத்தில்தான் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவார் என விமர்சித்த உதயநிதி, தமிழக அரசின் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதாவுடனான பாமகவின் கூட்டணியையும் அவர் விமர்சித்தார்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாதது குறித்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்.
கோவையில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், கட்சித்தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்