குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலையை இளைஞர்களுடன் இணைந்து சீர் செய்த காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் இருந்து `எப்போதும் வென்றான்’ ஊராட்சிக்கு செல்லும் சாலையில் சில இடங்களில் குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்தன. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுணர்வை வளர்க்கும் விதமாக பசுவந்தனை காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காவல்நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து காவல் நிலையத்தை சுத்தப்படுத்தியதோடு காவல்நிலைய வளாகத்தில் பலவகை மரக்கன்றுகள் மற்றும் பூஞ்செடிகளை நட்டு வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பசுவந்தனையில் இருந்து எப்போதும் வென்றான் செல்லும் சாலையில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் காவல் துறையினர், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து மண் நிரப்பி தற்காலிகமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்ட பணியை அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இனியாவது நெடுஞ்சாலை துறையினர் நிரந்தரமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.