உயர்நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரியும் ஷெரின் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், வி.ஜே சித்து ஆபாச வார்த்தைகள் பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிடுவதாகவும், கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தி, அதனை வீடியோவாக பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் கார் ஓட்டியபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டதால் மதுரை அண்ணாநகர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்தும் புகாரில் குறிப்பிட்டிருக்கும் பயிற்சி வழக்கறிஞர் ஷெரின், “தொடர்ச்சியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று யூடியூபில் வீடியோக்களை பார்த்து வருகின்றனர். தகாத வார்த்தைகளில் பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் VJ SIDHU VLOGS சில நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி சென்னை விமான நிலையம் இருக்கக்கூடிய சாலையில் பயணிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குகிறார். மட்டுமன்றி அவரின் அனைத்து வீடியோக்களிலும் ஆபாச வார்த்தைகள் இல்லாத வீடியோக்களே இல்லை. ஆகவே டிடிஎஃப் வாசன் எடுக்கப்பட்ட நடவடிக்கை இவர்மீதும் எடுக்கப்படும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த வீடியோ கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் டி.டி.எஃ.ப் வாசன் கார் ஓட்டியபடி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு யூடியூபர் மீதும் இத்தகைய புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.