வேலூரை வெள்ளூர் என உச்சரித்து படித்தபோது தவறாக தெரியவில்லையா என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதுவதற்கானவும் அரசாணையைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இதனை பலரும் வரவேற்றாலும் சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிடப்பட்ட பெயர் மாற்றத்தில் தவறு இருப்பதாகவும், அதில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் " தமிழில் ஊர்களின் பெயர்கள் உச்சரிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில குறைகள் இருந்தால் வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும். ஆங்கிலேயர் வைத்த பெயர்கள் இப்போதும் தொடர்வது நல்லதல்ல" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் " பெங்களூர் என்பதை பெங்களூரூ என மாற்றியுள்ளார்கள். கல்கத்தா என்று இருந்ததை கொல்கத்தா என மாற்றியுள்ளார்கள் . ஒரிசா என்பதை ஒடிசா என மாற்றியுள்ளார்கள். அது போன்று தான் இதுவும். வேலூர் சரியாகத்தான் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தனை காலம் வேலூரை, வெள்ளூர் என படித்தபோது தவறு தெரியவில்லையா" என கேட்டுள்ளார்.