அமைச்சராகும் உதயநிதி – பல அமைச்சர்களுக்கு துறை மாற்றம்! யார் யாருக்கு என்னென்ன துறை?
திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், அவருக்கு ஒருக்கப்படும் துறை எது, அமைச்சரவையில் மாற்றம் பெறும் துறைகள் எவை எவை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை வைத்திருந்த மெய்யநாதன், இனி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக மட்டும் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் மதிவேந்தன், வனத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருக்கும் குன்னூர் கே.இராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை - முன்னாள் ராணுவத்தினர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும், ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் இருக்கும் சிஎம்டிஏ இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரிடம் கூடுதலாக வழங்கப்படலாம் எனவும், கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் இருக்கும் புள்ளியில் துறை நிதித்துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனிடமும், பிடிஆரிடம் கூடுதலாக இருக்கும் மனித வள மேலாண்மை துறை தங்கம் தென்னரசிடம் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது