நீட் தேர்வு ரத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று (ஆகஸ்ட் 20) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
இதில் பேசிய அவர், “திமுக எந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அது சிறப்பாகவும், எல்லோரும் வியக்கும் வண்ணமும் இருக்கும்.
இதுவரை 21 உயிர்களை நீட் தேர்விற்கு பலி கொடுத்திருக்கிறோம். இதையெல்லாம் நாம் தற்கொலை என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் சொல்கிறேன், இந்த 21ம் தற்கொலை அல்ல.. கொலை.
இந்தக் கொலையைச் செய்தது ஒன்றிய பாஜக அரசு. அந்தக் கொலைக்குத் துணை நின்றது அடிமை அதிமுக. இதை நான் திரும்பத் திரும்பச் சொல்வேன். நான் நீட்டைப் பற்றி கடந்த 5 வருடங்களாகப் பேசிவிட்டேன். இனிமேல் பேசவும் தயாராக இருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியிலே நான் ஓர் அமைச்சராக, எம்.எல்.ஏ.வாகப் பங்கேற்கவில்லை. சாதாரண ஒரு மனிதராக, உதயநிதி ஸ்டாலினாகப் பங்கேற்கிறேன். இறந்துபோன 20 குழந்தைகளின் அண்ணனாகப் பேச வந்துள்ளேன். நான் எந்த உணர்வுடன் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டேனோ, அதே உணர்வுடன்தான் நீங்கள் அத்தனை பேரும் இதில் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றி.
இந்தப் போராட்டத்தை அறிவித்தவுடன் எல்லோரும் வந்து என்னிடம், ‘இதை அறிவித்து விடுவீர்கள்; ஆனால் இதில் கலந்துகொள்ள மாட்டீர்கள்’ என்றனர். அதற்கு நானே, ‘அப்படியெல்லாம் இல்லை. இதில் நானே கலந்துகொள்ள இருக்கிறேன்’ என்றேன். அதற்கும் சிலர், ‘இதில் நீங்கள் கலந்துகொள்ளக் கூடாது. சட்டச் சிக்கல் வரும். உங்களுடைய அமைச்சர் பதவி பறிக்கப்படும்’ என்றனர்.
அதிலும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், ’பொறுப்பில் இருந்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது’ எனச் சொல்லி என்மீது புகாரே கொடுத்துள்ளார். அதற்கு நான் சொன்னேன், ‘இந்த அமைச்சர் பதவி இருந்தால் இருக்கட்டும்; போனால் போகட்டும். நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன்’ என்று.
திமுக இயக்கம் பொறுப்பில் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது கிடையாது. எங்களுக்கு எங்கள் மாணவர்களின் கல்வி உரிமை முக்கியம். அதற்காக என்ன இழப்பு வந்தாலும், அதைச் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லித்தான் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே நாம் ஒருபக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அங்கே ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு கோச்சிங் செண்டர்போல் கூட்டம் நடத்துகிறார்.
அதில் ஒரு மாணவரின் தந்தை எழுப்பிய கேள்விக்கு ’ஐ வில் நெவர்’ என்கிறார். நான் கேட்கிறேன்... Who are you? எங்கள் முதல்வர் சொல்கிற வேலையை ஒன்றிய அரசிடம் கொடுப்பதுதான் உங்களது வேலை. நீங்கள் ஒரு தபால்காரர். மரியாதை கொடுத்தால் நீங்கள் போய்க் கொண்டே இருக்கிறீர்கள்.
அவர் பெயர் ஆர்.என்.ரவி அல்ல; ஆர்.எஸ்.எஸ்.ரவி. நான் உங்களுக்கு (ஆளுநருக்கு) ஒரு சவால் விடுகிறேன். நீங்கள், உங்களுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். அங்கே எங்கள் கழகத்தின் கடைக்கோடி தொண்டர் ஒருவரை நிற்க வைக்கிறோம். உங்களால் வெற்றிபெற முடியுமென்றால், அப்போது மக்களைச் சந்தியுங்கள்.
உங்களது சித்தாந்தங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் வெற்றிபெற்றுவிட்டு வாருங்கள்; அப்புறம் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்கிறேன். நீட் தேர்வுக்கு ஆதரவாக நானே வருகிறேன். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ‘இரும்புப் பெண்மணி’ என்பார்கள். அப்படிப்பட்டவரை தலைவராகக் கொண்டிருக்கும் அதிமுகவினர், ஒரு பித்தளை அல்லது பிளாஸ்டிக் மனிதர்களாகவாவது இருக்க வேண்டாமா? மோடியும் அமித் ஷாவும் பிசைந்து வைத்த களிமண்னாகத்தான் அதிமுகவினர் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஓர் விடிவு வரவேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்து ஆட்சியில் உட்கார வைத்தால், கண்டிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு ரத்தாகும். அருமை சகோதரர் ராகுல் காந்தியே அந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளார். இந்தப் போராட்டம் இத்துடன் நிற்காது. தலைவரின் அனுமதியைப் பெற்று டெல்லியில் நடத்தப்படும். அதிமுக-வினரும் எங்களோடு வாருங்கள்; பிரதமரின் வீட்டின் முன் போராடுவோம். ஒன்றாக போராடி நீட் தேர்வு ரத்தானால், அந்த வெற்றியை அதிமுக-வே எடுத்துக்கொள்ளட்டும்” எனக் கடுமையாகப் பேசினார்.