“கூடுதல் ஆசிரியர் நியமன நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

“கூடுதல் ஆசிரியர் நியமன நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
“கூடுதல் ஆசிரியர் நியமன நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on
“ஆசிரியர் பணிமாறுதலுக்கான வேலைகள் நிறைவு பெற்ற பிறகு, கூடுதல் ஆசிரியர் நியமனத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.
திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுவரை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் தான் அரசு உறுதியாக இருக்கிறது.
ஆலோசனைக்குழு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி தயார் நிலையில் இருக்கவேண்டும் என அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒத்துழைப்புடன் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்துள்ளோம். மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 1ஆம் தேதி 9,10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் நியமனத்துக்கான அவசியமும் உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பணி நிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேபோல ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் குறித்த ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் பணிமாறுதல் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு, அது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின் கூடுதல் ஆசிரியர் நியமனத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் ஏறத்தாழ 37,579-க்கு மேல் அரசு பள்ளி உள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் கூடுதலான மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். ஒரு சில பள்ளிகளில் 150 மாணவர்கள் படித்த பள்ளிகளில் 300 பேர் என சேர்க்கை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்றார்போல்  பள்ளி கட்டமைப்பு வசதி, ஆசிரியர் தேவை குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் விபரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் கூடுதல் தேவைகள் ஏதுமிருந்தாலும், மக்கள் பிரதிநிதியிடம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி ஆணையிடுங்கள். பென்ஷன் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி நிறைய கேள்வி கேட்கப்படுகிறது. இந்த இடத்தில், ‘தேர்தல் அறிக்கையில் கூறிய எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது; எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக செய்வோம்’ என நிதியமைச்சர் கூறியதை முதலமைச்சரும் தெளிவுபட கூறியுள்ளார். அதையே நானும் சொல்கிறேன். அதேபோல புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது என்பது குறித்த முடிவு முதலமைச்சர் சொல்ல வேண்டிய கருத்து” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com