தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: இழுபறிக்குப் பின் துரைமுருகன் வெற்றி; டஃப் கொடுத்த ராமு யார்?

தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: இழுபறிக்குப் பின் துரைமுருகன் வெற்றி; டஃப் கொடுத்த ராமு யார்?
தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: இழுபறிக்குப் பின் துரைமுருகன் வெற்றி; டஃப் கொடுத்த ராமு யார்?
Published on

10-ஆவது முறையாக பேரவைக்குச் செல்ல இருப்பவர்; ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி வாகை சூடி, 8-ஆவது முறையாக களம் கண்டவர். கஷ்டகாலங்களில் கூட எளிதாக வெல்லும் அவரை, இம்முறை திணறச் செய்து விட்டார் முதல்முறையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர். 

பெரும் போராட்டத்திற்கு பின் துரைமுருகனுக்கு கிடைத்த வெற்றி குறித்தும், டஃப் கொடுத்த ராமுவின் பலம் குறித்தும் ஒரு பார்வை...

இறுதி வரை இழுபறி, நீண்ட குழப்பம், அதிகாரிகளிடன் வாக்குவாதம் என, பெரும் போராட்டத்திற்குப் பிறகு 746 வாக்குகள் வித்தியாசத்தில் காட்பாடி தொகுதியை வென்றார் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். இவருக்கு இறுதி வரை நெருக்கடி கொடுத்தவர், அ.தி.மு.க வேட்பாளர் ராமு. 

முதல் சுற்றில் இருந்து 8ஆவது சுற்று வரை, ராமு முன்னிலை வகித்து வந்த நிலையில், 9ஆவது சுற்று தொடங்கி 20ஆவது சுற்று வரை துரைமுருகன் முன்னிலை வகித்தார். 22ஆவது சுற்றில் இருந்து 25ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராமு மீண்டும் முன்னிலை வகித்தார். இதற்கிடையில், 1, 2, 11 மற்றும் 18 ஆகிய சுற்றுகளில் 5 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. 

தபால் வாக்குகளுக்கு முன்னதாக பழுதான 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணக் கோரி இரு கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, இரவு 9.45 மணிக்கு திமுக வேட்பாளர் துரைமுருகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடி அறிவித்தார். தொடர்ந்து அவரது வெற்றிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

துரைமுருகன் பெற்ற வாக்குகள் 85,140. ராமு பெற்ற வாக்குகள் 84,394. துரைமுருகன் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது தபால் வாக்குகளே. அதில் இவருக்கு கிடைத்தது ஆயிரத்து 778 வாக்குகள். அதிமுக வேட்பாளர் ராமுவுக்கு கிடைத்தது 608 வாக்குகள். இதன் மூலம், பத்தாவது முறையாக சட்டபேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார் துரைமுருகன். காட்பாடி தொகுதியில் மட்டும் 8ஆவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்கிறார்.

60-ஆண்டு காலம் அரசியல் பழகியவரையே இறுதிச்சுற்று வரை இருக்கை நுனியில் அமரவைத்த ராமு யார்? வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த ராமு, பி.இ பட்டதாரி, விவசாயமே பிரதான தொழில். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார். இதற்கு முன் ஊராட்சி தலைவராகவும், கட்சியில் ஒன்றிய செயலாளர், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர், மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். 2016 சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். மக்களோடு நெருங்கிப் பழகுபவர் என்பதால், காட்பாடி தொகுதியில் ஆள் பலம் இல்லாமல், சொந்தக் கட்சியினர் ஆதரவு குறைவாக இருந்தும், தனது பகுதி அதிமுக ஆட்களை வைத்து வேலை செய்தார்.

துரைமுருகன் தொடர்ந்து வெற்றி பெற்றாலும், தொகுதி பக்கம் வர மாட்டார் என்ற குறை கிராமங்களில் இருக்கிறது. அதை முன்வைத்தும், இளைஞராகிய தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் படியும் மக்களைக் கேட்டு, தேர்தலை சந்தித்தார் ராமு. இவை தவிர, மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தது கூட, காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றிக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com