கர்ப்பிணி மனைவி, 2 வயது குழந்தை, வயதான அப்பா ! சிவசந்திரனின் மறுபக்கம்

கர்ப்பிணி மனைவி, 2 வயது குழந்தை, வயதான அப்பா ! சிவசந்திரனின் மறுபக்கம்
கர்ப்பிணி மனைவி, 2 வயது குழந்தை, வயதான அப்பா ! சிவசந்திரனின் மறுபக்கம்
Published on

இத்தனை பெரிய இழப்பை சின்னையன் குடும்பம் சந்திக்கும் என்று கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். யார் இந்த சின்னையன் ? நேற்று காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலை படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். அதில் சின்னையன் மகனான சிவச்சந்திரனும் ஒருவர். இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் சிவசந்திரனின் ஊதியம் மட்டுமே அவர் குடும்பத்துக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது கார்குடி கிராமம். இந்த கிராமத்தில் கூலி தொழிலாளியான சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன், அம்மா பெயர் சிங்காரவள்ளி, அக்கா பெயர் ஜெயந்தி திருமணம் ஆனவர்.  தங்கை ஜெய சித்ரா மாற்றுத்திறனாளி. சிவசந்திரனின் தம்பி பெயர் செல்வசந்திரன், ஆனால் இவர் சென்னையில் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.எனவே, இப்போது சிவசந்திரன் மட்டும் அக்குடும்பத்துக்கு ஜீவாதாரமாக இருந்துள்ளார்.

சிவசந்திரன் 2010 ஆம் ஆண்டுதான் சிஆர்பிஎப் பணியில் இணைந்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக தேசத்தை காக்கும் பணியில் இருந்தார். 2014 ஆம் ஆண்டுதான் சிவசந்திரனுக்கு, காந்திமதி என்பவருடன் திருமணமானது. இந்தத் தம்பதியனருக்கு சிவமுனியன் என்ற இரண்டு வயதேயான ஆண் குழந்தை இருக்கிறான். பாதுகாப்பு படை வேலை என்றாலே அதிகக் காலம் தேசத்துக்காக பாடுபட வேண்டும். குடும்பத்துக்காக செலவிடும் நாட்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.

ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே கிடைக்கும் விடுமுறையை குடும்பத்துடன் செலவிடுவார்கள். அதற்கு சிவசந்திரனும் விதிவிலக்கல்ல. கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சொந்த ஊருக்கு வந்த சிவசந்திரன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். மேலும் சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தரான சிவசந்திரன், மாலை அணிந்து சபரிமலைக்கு நண்பர்களுடன் சென்று வந்துள்ளார். விடுமுறையை மகிழ்ச்சியாக செலவழித்தப் பின்பு, பிப்ரவரி 9 ஆம் தேதி பணியில் மீண்டும் சேருவதற்கு குடும்பத்தினருக்கு பிரியா விடை கொடுத்துள்ளார்.

ஆனால், அதுவே சிவசந்திரனின் இறுதிப் பயணமாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். சிவசந்திரனின் மறைவு குறித்து பேசிய தந்தை சின்னையன் " நிவாரணம் கொடுத்தாலும் அதை வைத்து நாங்கள் ஒன்று செய்ய போவதில்லை. என் மகன் நாட்டை காப்பத்த போனான் ஆனால் வீட்டை காப்பத்தாமல் போயிடான்” என்று உணர்ச்சி மிகுந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் மனைவி காந்திமதி செவிலியர் படிப்பு படித்துள்ளார். அவருக்கு செவிலியர் படிப்பிற்கான "ஒரு வேலை தரவேண்டும்" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சிவசந்திரனின் மறைவு குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு என்பதே கசப்பான உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com