திருச்சி தூய வளனார் கல்லூரியின் 179-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியகாராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பேசியதன் விவரம் பின்வருமாறு:
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும், சமூக நிதியை உறுதி செய்வதிலும் கல்வியே முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவேதான், தமிழக அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுகிறது. அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் கல்வியை முக்கியக் கருவியாக கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 6 சதவிகிதம் பேர் மட்டும்தான் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்கள் 15 சதவிகிதம் தமிழகத்தில்தான் இடம்பெற்றுள்ளன. தமிழக மக்கள் தங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள். அதனால்தான் இது சாத்தியமானது.
நமது பண்டைய வரலாறு, கலாசாரம், பண்பாடு, இட வசதி உள்ளிட்டவற்றால் பல ஆண்டுகளாக தமிழகம் அறிவின் மையமாகவே விளங்கி வருகிறது. மகத்தான அறிவைக் கொண்டுவந்த உலகெங்கிலும் உள்ள அறிஞர்களை தமிழகம் வரவேற்றது. கடந்த காலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் மருத்துவ மிஷன்கள் பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளன. அவை, இப்போது சிறந்த மையமாக செயல்படுகின்றன.
நமது பாரம்பரியமும், மரபும் எப்போதும் புதுமைக்கு தடையாக இருந்ததில்லை. நவீன மாற்றத்தையும், அதன் தொழில்நுட்பத்தையும் உள்கிரகித்துக் கொள்ளும். அந்த வகையில் கல்வி நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வளர்ச்சி பெற்றவையாக விளங்குகின்றன.
யாதும் ஊரே-யாவரும் கேளீர், கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்ற தாரக மந்திரத்தைக் கொண்ட நாம் உலகிற்கு முன் உதாரணமாக விளங்குகிறோம். சாதி, மத, இன பாகுபாடுகளை மறந்து மனிநேயத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் களம் கண்டோம்.
மனித நேயமும், சக மனிதருக்கு உதவும் பண்பும்தான் நமது அடையாளமாக உள்ளது. கல்வி நிறுவனங்களில்தான் இந்து, இஸ்லாமியர், கிறித்தவர் என்ற பாகுபாடு பின்பற்றுவதில்லை. எந்த மதத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் அனைத்து மதத்தவர்களும் கல்வி பயிலும் நிலையை தமிழகத்தில் பார்க்க முடியும். ஆலயங்களைவிட கல்விச் சாலைகளே அவசியம் என்ற வகையில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய பிறகுதான் தேவலாயம் கட்டப்பட்டதற்கான சான்று திருச்சியில் இருப்பதை அனைவரும் அறியலாம்.
சமூக நீதியை நிலைநிறுத்துவதில் கல்வியே மிகச் சிறந்த ஆயுதம். இந்த வகையில் தமிழக அரசும், மொழி, இன, மத, பாலின பாகுபாடு கூடாது என பணியாற்றி வருகிறது. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.