கொரோனா எதிரொலியால் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பெற்றோரிடம் வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இருப்பினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வுகளிலும் மாற்றம் இல்லை எனப்பட்டுள்ளது.
இதுதவிர உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை மட்டும் நடத்திக்கொள்ளவும், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் கூட்டங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் சுற்றுலா செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.