ஓடிடி (OTT) தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை அரசு நேரடியாகத் தடுக்க முடியாது எனக் கூறினார். அப்படி அரசு நேரடியாகத் தடுக்க முடியும் என்றால் எப்போதே தடுத்திருப்போம் என்றார். அத்துடன் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகிஸ்தர்கள், பிரபல நட்சத்திரங்கள் ஆகியோர் அமர்ந்து திரைப்படத்துறை மூலமாகப் பேச விரும்பினால் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற குறிப்பிட்டார்.
முன்னதாக இன்று, ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ஆன்லைன் தளத்தில் (OTT) வெளியானது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஒரு தரப்பினர் இந்தப் புது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு, ஆதரவு என நகர்ந்த ‘பொன்மகள் வந்தாள்’ இன்று அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பானது.