தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
வழக்கறிஞர் சரவணன் என்பவர் நேற்று தாக்கல் செய்த முறையீட்டில், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனவும் எனவே குடமுழுக்கிற்கு தடை தேவை எனவும் முறையீட்டில் வலியறுத்தினார்.
கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ததை அடுத்து சரவணனின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரித்தது. விசாரணையின்போது விளக்கம் அளித்த தமிழக அரசு, நவம்பர் மாதமே தொல்லியல் துறையிடம் அனுமதி பெறப்பட்டதாக தெரிவித்தது. 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்ததாக தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் குடமுழுக்கு நடத்தும் மொழி குறித்து விளக்கம் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, தமிழ், சமஸ்கிருத மொழிகளுக்கு சமமான மதிப்பே வழங்கப்படுகிறது. பிப்ரவரி 5-ம்தேதி தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
குடமுழுக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.