சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வுப் பெற்றதையடுத்து, சிலைக் கடத்தல் பிரிவுக்கு புதிய ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் புதிதாக ஏடிஜிபி பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலை கடத்தல் பிரிவிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் சிலை கடத்தல் பிரிவு வழக்களை பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
Read Also -> டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் !
சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட சிறப்பு அமர்வு, நீதிமன்றம் ஒரு தனிபிரிவை அமைத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டிருக்கும்போது, சிபிஐ விசாரணை நடத்த அரசாணை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அதனை ஏற்காத நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த சூழலில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது தொடர்பாக இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், சிலைக் கடத்தல் பிரிவின் ஐ.ஜி.யாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அபய்குமார் சிங் தமிழ்நாடு காகிகத நிறுவனத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக உள்ளார்.