தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் என நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான அனுமதி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதிகாக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று குடிசைகள் இருக்கும் பகுதிகளில் நெருப்பு பற்றக்கூடிய வகையில் பட்டாசு வெடிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.