ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்துக்கான போட்டி தேர்வுகளை தனியாகவும் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டித் தேர்வினை தனியாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தி, பணி நியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை பின்பற்றலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.