பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Published on

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு இதுவரை எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

பேரறிவாளன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார் என்றும், அவரது உடல்நலம் குறித்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆட்சேபிக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது மாநில ஆளுநர் தான் என்றும், எனவே, பேரறிவாளன் விடுதலை விவகாரத்திலும் ஆளுநர் முடிவெடுக்க முழு அதிகாரம் இருக்கிறது என்றும் வாதிட்டார்.

பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தின் மீதும், அவரது கருணை மனு மீதும் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐ ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டது என்பதையும் வழக்கறிஞர் நினைவுகூர்ந்தார்.

இதைத் தொடர்ந்து வாதாடிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பேரறிவாளனை விடுவிக்கும் முடிவு குடியரசுத் தலைவரிடமே இருப்பதாக தெரிவித்தார். அதேநேரத்தில், ஆளுநர் முடிவெடுக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் இருக்கிறதா? என்ற சட்டப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் மீதான விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியபோது, பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் எனக் கூறிய நிலையில் தற்போது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com