செய்தியாளர் - ரமேஷ்
இன்று நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டம் தற்போது நடந்துவருகிறது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர் என் ரவி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடந்துவருகிறது.
விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட தமிழக அரசின் சாதனையை விளக்கும் துறைசார்ந்த 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அரசு பள்ளி, அரசு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகளின் தமிழக பாரம்பரிய கலை கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஒடிசா மற்றும் மணிப்பூர் மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஆளுநர் தேசிய கொடியேற்றியபொழுது ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூ இதழ் தூவப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.