மரியாதை இல்லாமல் கேள்வி கேட்பதா ? கடுப்பான பன்வாரிலால்

மரியாதை இல்லாமல் கேள்வி கேட்பதா ? கடுப்பான பன்வாரிலால்
மரியாதை இல்லாமல் கேள்வி கேட்பதா ? கடுப்பான பன்வாரிலால்
Published on

ஆளுநர் என்ற மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என்று செய்தியாளர்களிடம் பேசிய பன்வாரிலால் புரோஹித் கடிந்து கொண்டார். 

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ என பல்வேறு விவகாரங்களில் தமிழகம் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகிறது. ஆனால் எந்த விவகாரத்திற்கு பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போதும் ஆளுநர் அமைதி காத்தார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஆளுநர் அறிவித்து இருந்தார். பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் திடீரென அதிக அளவில் அடிபட்டதால், அது குறித்து விளக்கம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் பேராசிரியை விவகாரத்தில் பரபரப்பும் கூடியது.

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்த அடுத்த சில நாட்களிலே தமிழகத்தின் மையமான பிரச்னைக்கு அது வந்தது. மாணவிகள் விவகாரம் என்பதால் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல் துறை விசாரணை, பல்கலைக் கழகம் தரப்பில் விசாரணை என அடுத்தடுத்து விசாரணைகள் அமைக்கப்பட்டது. அதோடு நிற்காமல் ஆளுநரே முன் வந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இத்தகைய பரபரப்பான நிலையில் ஆளுநர் பன்வாரிலால் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். முதலில், “ நிர்மலா தேவியின் முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம்” என்று பொறுமையான பதில் அளித்தார். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் ஆளுநர் டென்ஷன் ஆகிவிட்டார். “ஆளுநர் என்ற மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கிறீர்கள். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது” என்று கோபமாக பதில் அளித்தார். 

பின்னர் பொறுமையாக, “ என்னைப்பற்றி நீங்களும் விசாரிக்கலாம்.. என் வாழ்க்கை வெளிப்படையானது. குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்படாமல், எனது பணியை சட்டத்துக்குட்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றார். பொதுவாக ஆளுநர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவதில்லை என்னும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com