ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் பதவி விலக வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் வரும் 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களை மயக்கிடும் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், காவிமயமாக்கும் பாரதிய ஜனதாவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம் என்று முதல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக அரசின் தோல்விகளை விளக்கி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர களம் இறங்கி திமுகவினர் பணியாற்ற உறுதியேற்பதாக அடுத்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் விழிப்புடன் இருந்து ஆளும் கட்சியினர் தவறு செய்யாமல் தடுக்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் 3-ஆவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு மேலும் தாமதமின்றி செல்ல அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துவதாக நான்காவது தீர்மானம் கூறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆளுநருக்கு பரிந்துரைத்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு அடுத்த தீர்மானம் தெரிவிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள பாரத் பந்த் வெற்றி பெற திமுக ஒத்துழைப்பது என ஆறாவது தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பதவி விலக வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 18-ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஏழாவது மற்றும் எட்டாவது தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.