அரசு மரியாதையுடன் நடைபெற்ற எழுத்தாளர் கி.ரா இறுதிச்சடங்கு

அரசு மரியாதையுடன் நடைபெற்ற எழுத்தாளர் கி.ரா இறுதிச்சடங்கு
அரசு மரியாதையுடன் நடைபெற்ற எழுத்தாளர் கி.ரா இறுதிச்சடங்கு
Published on

கரிசல் இலக்கியத்தின் தந்தை என பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இறுதி சடங்கு, அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் கி.ரா., வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலமானார். அங்கு பொதுமக்கள் அஞ்சலியைத் தொடர்ந்து, கி.ராஜநாராயணனின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைசெவல் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலியைத் தொடர்ந்து, அரசு மரியாதையுடன் கி.ரா.வின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. கரிசல் மண்ணில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க எழுத்தாளர் கி.ரா.வின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தமிழகத்தில் எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை செய்வது இதுவே முதல்முறையாகும்.

தமிழக அரசு சார்பில், கோவில்பட்டியில் கி.ரா-வுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், அவரது நினைவைப் போற்றும் வகையில் படைப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் அரங்கம் நிறுவப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.ரா.வின் வாழ்க்கை கதை:

ஒடிசலான தேகம். உள்ளதை உள்ளபடி போட்டுடைக்கும் பேச்சு. உணர்வை சுமந்து வரும் எழுத்து. இதுதான் கி.ரா. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என்றழைக்கப்பட்ட கி.ராஜநாராயணன் பிறந்ததும் அதே கரிசல் மண்ணில்தான். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தார் கி.ரா. அவரது இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார். அவர் எழுதிய 'மாயமான்' என்ற சிறுகதை 1958ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறுநாவல், நாவல், சிறுகதை, கிராமியக்கதை, கடிதம் என இலக்கியத்தின் பலதளங்களில் இயங்கியவர்.

'கரிசல் கதைகள்', 'கொத்தைப்பருத்தி', 'கோபல்ல கிராமம்' போன்றவை கி.ரா.வின் முக்கியப் படைப்புகள். 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக 1991ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். உ.வே.சா. விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 'வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்', 'தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்' எனப்போற்றப்பட்ட கி.ரா. தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர்.

ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கில்லை, எழுதியதைப் படித்து அதை மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதுவேன் என்பார். முன்பெல்லாம் நண்பர்களுக்கு நீண்ட கடிதம் எழுதும் வழக்கம் கொண்ட கி.ரா. அவர்களது பதில் கடிதங்களை பாதுகாத்து வைப்பாராம். ஆனால் தற்போது கடிதத்துக்கான தேவை இல்லாமல் போய்விட்டது என்றார்.

கி.ரா.வின் 'கிடை' என்ற குறுநாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர அவரது எழுத்துகளில் பல அனுமதியின்றியே வெள்ளத்திரையில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கி.ரா. கவலைப்பட்டதே இல்லை. "இல்லேன்னு தானே என்கிட்ட இருந்து எடுக்குறாங்க, எடுத்துக்கட்டும் விடுங்கன்னு" விட்டுக்கொடுக்கும் எழுத்துலக அட்சயபாத்திரம். நல்ல இசை ஞானம் கொண்டவர் கி.ரா. வயலின் இசைக்கக் கற்றவர்.

கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கிப் பலர் தனிமையில் வாட, "எழுதப்படிக்க தெரிந்தவருக்கெல்லாம் தனிமையே தெரியாது, இசை தெரிஞ்சவருக்கு ஏதய்யா தனிமை" எனக்கேட்டவர். கொரோனா காலத்தில் 'அண்டரெண்டப் பட்சி' என்ற நூலை கையெழுத்து பிரதியாகவே வெளியிட்டார்.

தனது படைப்புகளுக்கான உரிமையை வாசகர் ஒருவருக்கு எழுதி வைத்தவர். கி.ரா. என்னும் கரிசல்காட்டுப்பூ உதிர்ந்துவிட்டாலும் அவரது எழுத்துகள் என்றென்றும் மணம்வீசிக்கொண்டே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com