சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்யாவிட்டால் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாமல் அரசு ஏன் இவ்வாறு செயல்படுகிறது..? அப்படியென்றால் அரசு செயலிழந்து விட்டதா..? எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும் அக்குழுவிற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தரவேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சார்பில், தனக்கு தேவையான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாமல் அரசு ஏன் இவ்வாறு செயல்படுகிறது..? அப்படியென்றால் அரசு செயலிழந்து விட்டதா..? என கேள்வி எழுப்பினார். அரசு அதிகாரிகள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகள் செய்து தராவிட்டால் அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். இதுவரை இந்த வசதிகளை செய்து கொடுக்காதது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் 2 வாரத்திற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லையெனில் தமிழக தலைமை செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.