வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து: "தமிழக அரசு சரியாக வாதிடாததே காரணம்" - சீமான்

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து: "தமிழக அரசு சரியாக வாதிடாததே காரணம்" - சீமான்
வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து: "தமிழக அரசு சரியாக வாதிடாததே காரணம்" - சீமான்
Published on

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என்று நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில், ”மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னிய சமூக மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லாது எனும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமுமளிக்கிறது. தமிழக அரசு, நீதிமன்றத்தில் போதுமான விளக்கங்கள் அளித்து வாதிடாததே இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஆகவே, உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கவும், 10.5% உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25க்கு மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணைகளின் போது மனுதாரர்கள் தரப்பில், "சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், "ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் என்ற அளவில் 65,04,855 வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை. 

மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே. குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது. அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரப்பட்டது.

இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பா.ம.க. தலைவர் மருத்துவர் எஸ்.ராமதாஸ் தரப்பில், "வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது" என வாதிடப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு,
மாநில அரசுக்கு சாதி அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? முறையான வரையறுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இன்றி இதுபோல உள் இட ஒதுக்கீட்டை வழங்கலாமா? அப்படி வழங்கினால் அது சட்ட விரோதமானதாகுமா? என்பது போன்ற 7 வினாக்களின் அடிப்படையில் வாதங்களை பகுப்பாய்ந்ததில், அரசு தனது சட்ட எல்லையை மீறி வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பிற்கு பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

அப்போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர்கள் தரப்பில், இந்த தீர்ப்பால் தங்களது கல்வி பாதிக்கப்படும் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லும் வகையில், தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com