கரூரில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கரூரில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இந்த இடங்களில் மாணவர்கள் நிரப்பப்பட உள்ளனர். இதுதவிர திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 இடங்களுக்கான அனுமதி இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளது.
கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள் இருந்த நிலையில் தற்போது இந்தாண்டு புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியுடன் கூடுதலாக 250 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான பரிந்துரை அனுமதி கிடைக்காமல் இன்னும் நிலுவையில் உள்ளன. இதுமட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு உள்ளன.