தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று இலங்கை அரசு கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். ஆனால், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று இலங்கை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவரை சுட்டுக்கொன்றுவிட்டு தற்போது மறுப்புத் தெரிவிப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருப்பதாகத் தெரிவித்தார். இரு நாட்டு மீனவர்களின் பிரச்னையை அமைதி பேச்சு மூலம்தான் தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 1980ம் ஆண்டிற்குப் பிறகு தமிழக மீனவர்கள் 250 பேரை இலங்கை சுட்டுக் கொன்றிருப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.