விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையே என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி 40 பயனாளிகளுக்கு அடமானக்கடன்,மகளிர் சிறு வணிகக்கடன், பண்ணைசாரா கடன் உள்ளிட்ட கடன்களை 60 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கினார்.மேலும் பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பங்குத் தொகையாக 100 பேருக்கு 3 லட்ச ரூபாய் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து உயர்மின் கோபுர பாதை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் சில அரசியல் கட்சிகள் அமைப்பினர் விவசாயிகளிடையே தவறான தகவலை அளித்து இந்த திட்டம் செயல்படுத்துவதில் தடையாக உள்ளனர்.
800 கிலோ அளவிற்கு திறனுள்ள மின் பாதையை அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதற்கான கம்பிவடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உயர் மின் கோபுரம் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியே அமைக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான். எனவே மத்திய அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்திற்காக அதிக அளவு இழப்பீடு பெற்றுத் தரவும் மாநில அரசு தயாராக உள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரளாவில் ஆட்சி செய்யும்போது 183 உயர்மின் கோபுரங்களை அமைத்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, கேரளாவில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது இரட்டை நிலைப்பாடு ஆகும்.
இந்த உயர் அழுத்த மின் பாதையை 400 கிலோவாட் அளவிற்கு இரண்டாக பிரித்து நிலத்திற்கு அடியில் கொண்டு சென்றாலும் கூட துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டியிருக்கும். கோயமுத்தூர் வரை 800 கிலோ வாட் ஆக செல்லும் மின் பாதை அங்கிருந்து பிரிந்து 2 ஆயிரம் மெகாவாட்டாக கேரளாவிற்கு செல்கிறது.
தமிழகத்திற்கு 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உயர் மின் கோபுரங்கள் வழியே கிடைக்கும். 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டு செல்வது சத்தீஸ்கரில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட போதும், ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது இதுபோன்ற எதிர்ப்பு இருந்தால் மின்வினியோகம் பெருமளவு பாதிக்கப்படும் எனவே போராட்டம் நடத்தும் விவசாயிகள் அமைப்பினர் இதனை புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும்.தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நானே நேரில் வந்து அவர்களுடன் பேசுவேன்” என்று தெரிவித்தார்.