நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள், பிரதானமான போட்டியாளர்கள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மூன்றாவது அணியாக வந்த கட்சிகள் குறிப்பிடத்தக்க சக்தியாய் வளர்வது அவ்வளவு எளிதல்ல என்பதையும் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
45.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது தி.மு.க. கூட்டணி. 159 இடங்களில் முதல் இடத்தையும், 73 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும், 2 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் 39.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள தி.மு.க.வின் உதயசூரியன் 188 தொகுதிகளில் 133 தொகுதிகளில் முதலிடத்தையும், 55 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18-இல் முதலிடத்தையும், 6-ல் இரண்டாவதாகவும், கோவை தெற்கில் மூன்றாவதாகவும் வந்துள்ளது.
39.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் முதலிடத்தையும், 159 தொகுதிகளில் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது அணிகளில் ஒன்றாகக் களமிறங்கி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 177 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், 57 தொகுதிகளில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளது. இதில் 233 தொகுதிகளில் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளது. இந்த கட்சியின் வாக்கு சதவீதம் 6.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட 165 தொகுதிகளில் 158 தொகுதிகளில் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளது. டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் மட்டும் இரண்டாம் இடத்தை பெற்ற அந்தக் கட்சி, 25 இடங்களில் மூன்றாம் இடத்தையும், 74 இடங்களில் நான்காம் இடத்தையும், 53 இடங்களில் ஐந்தாம் இடத்தையும் அடைந்துள்ளது.
அ.ம.மு.க. கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் இழந்துள்ள தேமுதிக இரண்டு தொகுதிகளில் மட்டுமே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 26 தொகுதிகளில் நான்காம் இடத்தையும், 23 தொகுதிகளில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்த கூட்டணி 2.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
2.45 சதவீத வாக்குகளை எடுத்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்ட 180 தொகுதிகளில் 178 இல் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளது. கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கில் மட்டும், இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தக் கட்சி, 25 தொகுதிகளில் மட்டுமே 3 ஆவது இடத்தை எட்டிப் பிடித்தது. 74 தொகுதிகளில் நான்காம் இடத்திற்கும் 53 தொகுதிகளில் ஐந்தாம் இடத்திற்கும், 14 தொகுதிகளில் 6 ஆம் இடத்திற்கும் சென்றுள்ளது.
தமிழகத்தில் இரண்டு அணிகளுக்கு இடையேதான் எப்போதும் போட்டி, மூன்றாவது அணி என்பது கனிந்து வருவது அவ்வளவு எளிதில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாகக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.