மழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்

மழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்
மழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்
Published on

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, பள்ளி முன்பருவ வகுப்புகளை தொடங்கும் முயற்சிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.

அங்கன்வாடிகளை தொடக்கப் பள்ளிகளோடு இணைத்து, முன்பருவ வகுப்புகளை தொடங்குவது ஏற்புடையதல்ல எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பில்தான் சேர்க்க முடியும் என்றிருந்ததை ப்ரீ.கேஜி முதலே சேர்க்‌கலாம் என்ற நி‌லையை அங்கன்வாடிகள் மூலம் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மழலைக் குழந்தைகளும் இனி அரசுப் பள்ளிகளிலும் பாடம் கற்று விளையாடுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அதன் முதல் படியாக, அங்கன்வாடிகள் உட்பட எல்லா வித தொடக்கப் பள்ளிகளிலும், பள்ளி முன்பருவ வகுப்புகளுக்கு ஒரே பாடத்திட்டத்திற்கான வரைவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பள்ளி முன்பருவப் பாடத்திட்ட வரைவின்படி, 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ப்ரீ.கே.ஜி வகுப்புகளில் சேர்க்கப்படுவர். 3 முதல் 4 வயதுக் குழந்தைகள் எல்.கே.ஜி வகுப்பிலும், 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் யு.கே.ஜி வகுப்பிலும் சேர்க்கப்படுவர். வகுப்புகள் காலை 9.30 முதல் பிற்பகல் 3.45 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பெருந்தசை இயக்க வளர்ச்சி, நுண்தசை இயக்க வளர்ச்சி, புலன்சார் வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி, மொழி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பயிற்சி அளிக்கப்படும். காலை 11 மணி முதல் 11.10 வரை சிற்றுண்டி நேரமும், 12.10 மணி முதல் 1 மணி வரை மதிய உணவு நேரமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை உறங்குவதற்கும், 3 மணி முதல் 3.20 வரை விளையாட்டு மற்றும் சிற்றுண்டி நேரமும் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் பெற்று சொல்லிக் கொடுக்கும் அதே பாடங்களை, அரசுப் பள்ளிகளில் அதே வசதிகளோடு இலவசமாக சொல்லிக் கொடுக்கவுள்ளதால் இதற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எனினும், தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள பள்ளி முன்பருவ வகுப்புகளுக்கும், ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டுள்ள இத்தகைய வரையறைகள் 2 வயது முதலான குழந்தைகளுக்கு ஏற்றதுதானா எனக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கக்கான நுழைவு வகுப்பு 1ஆம் வகுப்பிலிருந்து ப்ரீ.கே.ஜி ஆக்கப்படுமா? 9.30 முதல் 4 மணி வரை பள்ளி என்பது 2 வயது முதலான குழந்தைகளுக்கு சாத்தியமா போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. 

இது குறித்து பள்ளிக் கல்வித் துறையிடம் கேட்டபோது, 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும், விருப்பத்திற்கேற்றாற்போன்று பள்ளி நேரத்தை பெற்றோர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டால், மாணவர் சேர்க்கை உயர வாய்ப்பிருக்கும் என மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com