சேலம் கோ ஆப்டெக்ஸ் பட்டு விற்பனை நிலைய சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அடுத்த மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வருகை செல்ல உள்ளதால், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அனைத்து பிரிவுகளையும் நேரில் பார்வையிட்ட அவர், விற்பனை உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, “முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரைவிட முதலமைச்சர் ஸ்டாலின் கைத்தறி துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கைத்தறி துறையில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 400 பேர் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கைத்தறி துறையில் குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு தற்பொழுது முன்னேற்றம் கண்டு வருகிறது. மக்களைப் பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை பார்த்தால் கூட சிரிப்பது இல்லை. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த துறையின் முன்னேற்றத்திற்காகவும் எதுவும் செய்யவில்லை” என்றார்.