சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பிணை வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவந்த நிலையில் இதற்கான தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அப்படி இன்று மறுவிசாரணைக்கு வந்த அந்த வழக்கில், கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணை குற்றவாளியாக இருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
இதையடுத்து இன்று மாலை சென்னை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஆருயிர் சகோதரர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என்று பதிவிட்டுள்ளார்.