ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பாகவே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான வழக்கில் முடிவு கிட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பினை ஒத்திவைத்தது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்துக்கு நாளுக்குநாள் ஆதரவு பெருகியது.
இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஆனால், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மத்திய அரசால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் கைவிரித்தார். அதேநேரம் மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நடவடிக்கை விரைவில் தெரியும் என்று குறிப்பிட்டார். பிரதமரைச் சந்தித்த பின்னர் இன்றே தமிழகம் திரும்புவதாக இருந்த முதலமைச்சரின் பயணமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழகம் தொடர்பான விவகாரங்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டவல்லுனர்களுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.