பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று நடந்த திமுக நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் தான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் தான் என பேசியிருந்தார். அத்துடன் “காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும் தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே திமுக கரைவேட்டி கட்டியவன். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டிக்கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருந்தார். பி.டி.அரசகுமாரின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பி.டி.அரசகுமார் பேச்சு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், “அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.