கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இவர். காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருவதே தனது விலகலுக்கான காரணம் என விஜயதரணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு விஜயதரணி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
அந்த கடிதத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் விஜயதரணி பகிர்ந்திருந்தார். 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், நேற்று விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயதரணிக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி நேற்று பாஜகவில் சேர்ந்தது அனைவரும் அறிந்த விஷயம். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, ‘காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பாஜகவில் இணைந்துவிட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று இணைய வழியில் ஒரு தகவலை சட்டப்பேரவைத் தலைவருக்கும், சட்டப்பேரவையின் முதன்மை செயலருக்கும் அனுப்பி இருக்கின்றார்.
அதன் தொடர்ச்சியாக விஜயதரணியும், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை தன் கைப்பட எழுதி இணைய வழியில் என் கவனத்திற்கும், சட்டப்பேரவை முதன்மை செயலருக்கும் அனுப்பி இருந்தார். இன்று காலை எனக்கு தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.