11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களின் அடிப்படையிலான பாடப்புத்தகங்களின் விலை பழைய விலையை விட மூன்று முதல் 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 1, 6, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே புதிய பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரவுள்ளன. உயிரியல் பாடத்தில் உள்ள தாவரவியல், விலங்கியல் பிரிவுகளுக்கு இதற்கு முன்பு தலா ஒரு புத்தகமாக இருந்தது. தற்போது தலா இரண்டு புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கணக்குப் பதிவியல், ப்யூர் சயின்ஸ் பிரிவின் விலங்கியல், தாவரவியல் புத்தகங்களும் இரண்டு வால்யூம்களாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 11ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. 70 ரூபாயாக இருந்த உயிரி-விலங்கியல் புத்தகத்தின் விலை, தற்போது இரண்டு வால்யூம்களையும் சேர்த்து 230 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், கணக்குப் பதிவியல் புத்தகத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 280 ரூபாயாக அதிகரித்துள்ளது. புத்தக பக்கங்களின் அதிகரிப்பாலும், தாள்களின் தரம் உயர்த்தப்பட்டதாலும் புத்தகங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.