செய்தியாளர்: ஆனந்தன்
திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
“தை முதல் நாளை திருவள்ளுவர் தினமாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
ஆளுநருக்கு தமிழ்நாட்டு பண்பாடும் தெரியாது, தமிழ்நாட்டு பழக்க வழக்கமும் தெரியாது, திருவள்ளுவரும் தெரியாது. ஆளுநர், திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல நட்சத்திரம் எல்லாம் அறிவித்து திருவள்ளுவருக்கும் காவி உடை அணிவித்து இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுவது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்.
திருவள்ளுவருக்கும், ஆளுநருக்கும் எந்த தொடர்பு இல்லை, வேண்டுமென்றே திட்டமிட்டு பிரமதர் மோடி தொடங்கியதை, ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். ஆளுநரின் செயலை திமுக வன்மையாக கண்டிக்கிறது. திருக்குறளில் ஒரு குறள் கூட ஆளுநருக்கு தெரியாது, ஆளுநரின் செயல்பாடுகளில் அவரின் அறியாமை வெளிப்படுகிறது, இருந்தாலும் இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த காரணத்தால்தான், வடமாநில பிரசாரங்களில் தமிழகத்தை பற்றி மோடி இவ்வாறு பேசி வருகிறார்” என்றார்.
முன்னதாக, நேற்றைய தினம் ‘திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ்’ என்ற பெயரில் ஆளுநர் அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராஜ்பவனில் திருவள்ளுவர் தினம் கொண்டாட இருப்பதாக அவர் தெரிவித்து, திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதை போன்று வடிவமைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.