திருவாரூர் மாவட்டம் களப்பால் கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மாரிமுத்து என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்தசூழலில், மறைந்த ரவுடி ராஜ்குமார் சமாதி அருகே 6 பேர் கொண்ட கும்பல், மக்களுக்கு இடையூறு செய்வதாக நீடாமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், ஷியாம் உட்பட 5 பேரை பிடித்தனர். அப்போது மனோ நிர்மல்ராஜ் என்ற ரவுடி மட்டும் தப்பிச் சென்று, ஆதனூரில் பகுதியில் பதுங்கியுள்ளார். இதனையறிந்து அங்கு சென்று காவல்துறையினர் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவர், காவலர் விக்னேஷின் வலது கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், மனோ நிர்மல்ராஜை காலில் சுட்டுப் பிடித்துள்ளார். தற்போது காவலர் விக்னேஷூம், ரவுடி மனோ நிர்மல்ராஜூம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மாரிமுத்து கொலையில், மனோ நிர்மல்ராஜ்க்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.