திருவாரூர் தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து

திருவாரூர் தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து
திருவாரூர் தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து
Published on

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி
தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு தமிழக அரசியல்
கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தன.

இந்தச் சூழலில் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதனைதொடர்ந்து அமமுக சார்பில் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுவார் என டிடிவி
தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் நேர்காணல் கூட்டத்திற்குப் பின் திமுக தலைவர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன்
வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் அதிமுக சார்பில் வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்ற பின்னர் அதிமுக
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர்
அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்தார். இதனால் திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்று சிலர்
கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு
அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் திருவாரூர் தேர்தலை ரத்து செய்தது சரியே எனவும் தனது
கணிப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என
தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவை சேர்ந்த தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தபோதே
தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது எனவும் அந்த முடிவைத்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எனவும்
குறிப்பிட்டார்.

இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையமும் திட்டமிட்டு
தேர்தலை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சாகுல் அமீது கூறுகையில், தேர்தல் ஆணையம் ரத்து என்பது மக்களின் உணர்வுகளை
கேலிக்கூத்தாக்கும் செயல் எனவும் திட்டமிட்ட மத்திய மாநில அரசுகளின் சதி எனவும் தெரிவித்துள்ளார். இவ்வளவு நாட்கள்
நிவாரணப்பணிகளை மேற்கொள்ளாமல் அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும் எதிர்கட்சிகளின் அச்சத்தின் காரணமாக தேர்தல்
ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். இது மக்களின் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறுகையில், “திருவாரூர் தேர்தல் ரத்து என்பது சரியானது தான் என்பது எனது கருத்து.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு அரசு உதவ வேண்டும். தேர்தலுக்கான நேரம் இது
இல்லை. திருவாரூர் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
என தெரிவித்தார்.

தேர்தல் ரத்து அதிர்ச்சியளிப்பதாக அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் தேர்தல் ரத்து
செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிப்பதாகவும் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில்
ரத்தாகி விட்டது எனவும் அமைச்சர் ஒ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com