திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பில்லூர் மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு. விவசாய கூலியாக வேலை செய்து வரும் இவரது வீட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியுள்ளது.
இதையடுத்து, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டியுள்ளார். அப்போது குழியின் உள்ளே ஒரு உலோகப் பெட்டி இருந்துள்ளது. இதையடுத்து அந்த உலோகப் பெட்டியை எடுத்த செல்வராசு திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில், பழமையான பெருமாள் சிலை, ஆண்டாள் சிலை, மற்றும் கருடன் சிலை, உலோகத்திலான ருத்ராட்சம், மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை, மற்றும் வட்ட வடிவிலான தாளம் ஆகியவை இருந்துள்ளது.
இந்நிலையில், உடனடியாக பேரளம் காவல் துறையினருக்கு செல்வராசு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் மற்றும் காவல் துறையினர் நேரில் பார்வையிட்டு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.