திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படும் நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் துணையுடன் கோவில் நிர்வாகத்தினர் மீட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நான்கு புறங்களிலும் முக்கியமான கோபுரங்கள் உள்ளன. அதில் வடக்கு புறமுள்ள அம்மணி அம்மன் கோபுரத்தை கட்டியவர், அம்மணி அம்மன் என்ற பெண் சித்தர் ஆவார். இவருக்குச் சொந்தமான கோவிலை ஒட்டிள்ள அம்மணி அம்மன் மடம் 23 ஆயிரத்து 800 சதுரடி பரப்பளவை கொண்டது. தற்போது இந்த மடம், அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமானதாகும். இந்நிலையில், அந்த இடத்தை சமீப வருடங்களாக பாஜக-வைச் சேர்ந்த ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவரான சங்கர் என்பவர் ஆக்கிரமித்து அதில் இரண்டடுக்கு மாடி வீடும் கட்டியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இவரை பலமுறை காலி செய்யச் சொல்லி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியும் அவர் காலி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது வழக்கு முடிவுற்ற நிலையில் இந்த இடத்தை காலி செய்து கோவிலிடம் இடத்தை ஒப்படைக்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத அவர், இடத்தை காலி செய்ய மறுத்த வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று நூற்றுக்கணக்கான போலீசார் துணையுடன் அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அந்த இடத்தை இடித்து தரைமட்டமாக்கும் பணியையும் அந்த இடத்தை மீட்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.