ஆட்சியராக விருப்பம்: சைரன் வைத்த காரில் அமர்த்தி மாணவியை ஊக்கப்படுத்திய கலெக்டர்!

ஆட்சியராக விருப்பம்: சைரன் வைத்த காரில் அமர்த்தி மாணவியை ஊக்கப்படுத்திய கலெக்டர்!
ஆட்சியராக விருப்பம்: சைரன் வைத்த காரில் அமர்த்தி மாணவியை ஊக்கப்படுத்திய கலெக்டர்!
Published on

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். நான் டாக்டராக வேண்டும். நான் பைலட் ஆக வேண்டும் என ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பள்ளிக்காலத்தில் ஆயிரம் கனவுகள் இருக்கும். அப்படி, நான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என தனது லட்சியத்தை சொன்ன மாணவிக்கு திருவண்ணாமலை ஆட்சியர் புது விதத்தில் ஊக்கம் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வித்துறைக்கு பல நலத்திட்டங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் செய்யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10-ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது. அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் “நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்” என்றார்.

உடனே ஆட்சியர், “வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்” எனக் கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்றுநேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், “இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும். நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்” என்றார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com